ஆரண்ய காண்டம் | 2011 | தமிழ்

12:46:00 PM


"என்னடா பெரிய ஃப்ரெண்ட்ஷிப்பு, ஈயும் பீயும் ஃப்ரெண்ட்ஷிப்பு; பீ காஞ்சா ஈ பறந்திறபோது" இந்த டயலாக்கை எழுதியவரது முதல் படம் தான் 'ஆரண்ய காண்டம்'. பெயர் தியாகராஜன் குமாரராஜா. கொஞ்சம் கலீஜாக இருந்தாலும் இப்படிப்பட்ட டயலாக் தமிழ் சினிமாவிற்கு புதிது. அவர் எடுத்திருக்கும் இந்தப் படமும் இந்த டயகாக்கைப் போலவே தான்.

நாம் எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழிலும் பிற மொழிகளிலும். ஆனால், இந்த மாதிரியான ஒன்றை நான் பார்த்ததில்லை. தமிழ் சினிமா உருப்பட்டுவிடுமோ என்கிற கவலை பல பேருக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. ஒரு பாட்டு இல்லை, இரட்டை அர்த்த வசனம் இல்லை, ஹீரோயின் தொப்புள் காட்டவில்லை, தனி டிராக் காமெடியன் இல்லை. சத்தியமாக இது ஒரு தமிழ் சினிமாதான் என்று அடித்துச் சொன்னால்தான் நம்மவர்கள் நம்புவார்கள். உலக சினிமா உலக சினிமா என்று சொல்கிறார்களே, அது நிச்சயம் இப்படித்தானிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. New York நகரத்தில் நடந்த South Asian Internation Film Festivalலில் ஜூரி அவார்ட் வாங்கும் போதே தெரிந்திருக்கவேண்டும் படம் எப்படியென்று. நிதானமாக செல்லும் காட்சிகள், ஸ்லோ மோஷன் ஆக்ஷன், சேஸிங் கோரியோகிராபி, கதையின் மாந்தர்கள் நியாயமாக பேசவேண்டிய, பேசக்கூடிய இயல்பான வசனங்கள் வார்த்தைகள், பிரம்மிப்பூட்டும் கேமரா கோணங்கள், அருமையான அதேசமயம் கதையை விட்டு நகரவிடாமல் பிடித்துவைக்கும் பாடல்கள் இல்லாத பின்னனி இசை, சின்ன சின்ன டுவிஸ்ட்கள், அற்புதமான நடிப்பு... இவ்வளவு இருக்கிறது உலக சினிமா லிஸ்டில் ஈஸியாக இடம்பெற, வேறு என்ன வேண்டும்?

படத்தின் கதை. சிங்கப்பெருமாள் ஒரு தாதா. 'ஆய் ஊய்' என்று முன்பு இருந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. ஒரு இளம்பெண்ணை 'வைத்து' இருந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறது. அந்த இளம்பெண்ணின் பெயர் சுப்பு. காலங்காத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் அவமானபட்டு, அதேசமயம் கெத்து குறையாமல் வெளியே வரும் சிங்கப்பெருமாளிடம் ஒரு போதைப் பொருள் டீலிங் பத்தி சொல்லி எடக்கு மடக்காக ஏதோ சொல்லி 'பசுபதி' சீண்ட, காண்டாகிறான். பசுபதியை போட்டுத்தள்ள முடிவு செய்கிறான். ஆனால் பசுபதி சரியான நேரத்தில் எஸ்கேப். இது ஒரு பக்கமிருக்க, ஒரு பக்கம் கஜேந்திரன், கஜபதி என்கிற இன்னொரு பிரதர்ஸ் கேங் சரக்கைத் தேடி அலைய, மறுபக்கம் சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டு கடனை அடைக்க முயலும் காளையனும் அவனது மகன் கொடுக்காபுளியும். இவ்வளவு களேபரத்தில் ஒரு கிளுகிளுப்பு என்றால் அது சிங்கப்பெருமாளிடம் வேலைபார்க்கும் சப்பைக்கும் சுப்புவுக்குமான காதல். உடனிருப்பவர்கள் சப்பையை சப்பை என்று நினைக்க, சப்பையோ சிங்கப்பெருமாளால் செய்யமுடியாததைச் செய்கிறான். முக்கியமான இந்த ஆறு கதாபாத்திரங்களான சிங்கப்பெருமாள், பசுபதி, சப்பை, சுப்பு, காளையன், கொடுக்காப்புளி ஆகியோரைச் சுற்றி ஒரு நாளில் நடக்கும் கதையே 'ஆரண்ய காண்டம்'. முதல் காட்சியிலேயே கதையை சொல்ல ஆரம்பித்து, கிளைமாக்ஸில் அழகாக முடித்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதி "என்னடா இது?" என்று கேட்க வைத்தாலும் இரண்டாம் பாதி "அடடே பேஷ்" போட வைக்கிறது. பல முறை பார்த்த கதையாகத் தெரிந்தாலும் 'மேக்கிங்' என்கிற அடிப்படையில் நிச்சயம் ஒரு புது அனுபவத்தைத் தரக்கூடியது "ஆரண்ய காண்டம்".

கதாபாத்திரங்களின் அறிமுகமோ, ப்ளாஷ்பேக் காட்சியோ எதுவுமே இல்லாமல் போகிற போக்கில் கேரக்டர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது கேரக்டர்களையும் புரிய வைக்கும் முதல் இடத்திலேயே 'சபாஷ்' வாங்கி விடுகிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. காஸ்டிங் எனப்படுகிற கதை மாந்தர்கள் தேர்வில் அடுத்த சபாஷ். இந்தக் கேரக்டர்களுக்கு இந்தந்த ஆட்களைத் தவிர யாரையும் படம் பார்த்து வெளியே வரும்போது நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கேமரா கோணங்கள் - அதியற்புதம் என்பது முதல் டிரைலர் வெளிவந்தபோதே தெரிந்து விட்டது. ஒளி ஓவியர் P.S. விநோத்திற்கு ஒரு சபாஷ். பிண்ணனியிசை - பெரும்பாலும் பின்னணியில் பழைய பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்றாலும் (உதாரணம்: இந்த மற்றும் இந்த டிரைலர்) தேவையான இடங்களில் 'அட' போட வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஒரு சபாஷ். சமீபத்திய படங்களில் சிறந்த பின்னணியிசை என்றால் அது "ஆரண்ய காண்டத்தில்" யுவன் கொடுத்திருப்பது தான். பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை ஒத்துக்கொண்டதற்கே இன்னொரு சபாஷும் தாராளமாகப் போடலாம். அடுத்தது படத்தொகுப்பு - வேகவேகமாக மாறும் காட்சிகளிலும், மெதுவாக மிக மெதுவாக 'எடிட்' செய்யப்பட்டிருக்கிற ஆக்ஷன் காட்சிகளிலும், பயமுருத்தாத க்ளோஸப் காட்சிகளிலும், பளுப்பு, சிகப்பு என்று விதவிதமான கலரிங்கிலும் சபாஷ் வாங்கி விடுகின்றனர் பிரவீன் K.L மற்றும் N.B ஸ்ரீகாந்த். (உதாரணம்: இரண்டாவதாக வெளிவந்த இந்த டிரைலர்) இந்த மாதிரியான ஒரு படத்தை துணிந்து தயாரித்து, போராடி வெளியிட்டிருக்கும் S.P.B.சரணிர்கு ஒரு தனி சபாஷ்!

தனியாக ஒரு பத்தி எழுத வேண்டும் படத்தின் வசங்களைப் பற்றி. முதல் உதாரண வசனம், படத்தின் முதல் வசனம். சிங்கப்பெருமாளிடம் சுப்பு சொல்லும் வசனம்.

"உன்னால எதுவும் பண்ணமுடியலனா என்ன ஏன்யா அடிக்கிற?" 

படத்திற்கு 'A' செர்ட்டிபிகேட் கொடுத்திருப்பது வயலன்ஸிற்காக அல்ல வசனத்திற்காக என்று தான் தோன்றுகிறது (உதாரணம்: இந்த டிரைலர்). அந்த அளவிற்கு அள்ளித் தெரித்திருக்கிறார்கள். இதுவரை வந்த, இனி வரப்போகும் எந்த தமிழ் படத்திலும் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் வர வாய்ப்பே இல்லை. 56 கட் எங்கே வெட்டினார்கள் என்று தெரியவில்லை. "அப்போ இன்னும் இருக்கா?" என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சுள்ளான் கொடுக்காப்புளியில் ஆரம்பித்து ஆளாளுக்கு ஆசால்ட்டாக அந்த ஓழி, இந்த ஓழி, அந்த மவன், இந்த மவன் என்று பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். பல இடங்களில் இந்த வசனங்கள் காமெடி கேப்பையும் பில் செய்கிறது.

உதாரணத்திற்கு சிங்கப்பெருமாள் தன் அடியாளுடன் பேசும் வசனம்.

சிங்கம்: "என்னடா யோசிக்கிற?"
அடியாள்: "இல்ல, பசுபதிய புடிச்சு என்ன பண்ணலாம்னு"
சிங்கம்: "ம், முத்தம் குடுத்து மேட்டர் பண்ணு, போய் கொன்னுட்டு வடான்னா..." 

இன்னொரு வசனம் சுப்புவிடம் சப்பை பேசுவது.

"எனக்கு கமல் தான் புடிக்கும். ஏன்னா அவர் தான் ஹீரோயின புடிச்சு நச்சுனு கிஸ் அடிச்சிடுவாரு. "ஹேராம் படத்துல கூட நடிச்ச பொம்பளையோட குண்டிய கடிச்சிடுவாரு"

இப்படி ரஜினி, கமலில் ஆரம்பித்து பிரபு, குஷ்பு ஏன் தாவூத் பாய் வரைக்கும் ஓட்டி எடுத்திருக்கிறார்கள் வசனத்தில். சேவல் சண்டையின் போது காளையன் பேசும் வசனங்கலெல்லாம் கேட்கும்பொழுது கொஞ்சம் பழக்கமில்லையென்றால் காது அழுகிப்போகும் அபாயமிருக்கிறது. அவ்வளவு ஆரவாரம். உட்கார்ந்து உட்கார்ந்து எழுதியிருப்பார் போல!

ஐநாக்ஸில் டிக்கட் 220ரூ, போய் வர ஆட்டோ 40ரூ, அதிகமாக பசியெடுத்துத் தொலைத்ததால் காஃபி, சமோஸா 90ரூ. மொத்தம் 350ரூ கொடுத்து, கம்பெனி சார்பில் லீ-மெரிடியலின் இன்று நடக்கும் பார்ட்டியை ஒதுக்கி "ஆரண்ய காண்டம்" பார்க்க ஓடோடி வந்ததற்கு பரம திருப்தி. தியேட்டரில் என்னையும் சேர்த்து பத்தே பேர் தான் அமர்ந்திருந்ததால் "ஸ்பெஷல் ஸ்கிரீனிங்" போய் வந்த எபெக்ட் வேறு.

யதார்த்தத் திரைப்படங்கள் என்பது பழைய வீடு, முள்ளும் மலரும் ஆரம்பித்து சமீபத்திய அழகர்சாமியின் குதிரை போலத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆரண்ய காண்டம் போலவும் இருக்கலாம். நிச்சயம் ஒரே ஒரு முறையேனும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இதுவே ஹாலிவுட் படமாக இருந்திருந்தால், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதாசிரியர், சிறந்த பின்னணியிசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு என்று வரிசையாக பல விருதுகளை அள்ளியிருக்கும். கொரிய படமாக வெளிவந்திருந்தால் நம்மவர்கள் "இத பாத்து கத்துக்கோங்கையா" என்று எழுதி மகிழ்ந்திருப்பர். ஆனால் படம் வந்திருப்பது தமிழில் அல்லவா... பார்க்கலாம் ரிசல்ட் எப்படியென்று...

You Might Also Like

7 comments

  1. நண்பரே...படம் பார்க்கவிருப்பதால் உங்கள் பதிவை முழுதாகபடிக்காமல் நிறுத்தி விட்டேன்.இது ஒரு உலக சினிமா எனச்சொன்னதால் நம்பிப்போகிறேன்.

    ReplyDelete
  2. @உலக சினிமா ரசிகன்: நிச்சயம் பாருங்க பாஸ்கரன்... ஹீரோ, வில்லன், நல்லவன் என யாருமே இல்லாமல் ராவான ஒரு படத்தை அப்படியே கொடுத்திருக்கிறார்கள். எனக்குப் பிடித்திருந்தது, நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் :-)

    @சங்கர் நாராயண் @ Cable Sankar: வருகைக்கு நன்றி கேபிள்-ஜி. உங்களது விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது இப்படம்.. :)

    http://www.thacinema.com/2011/06/blog-post.html

    ReplyDelete
  4. @MSK: தல, இந்தப் படம் உலக சினிமா ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும் என்பது தெரிந்ததே. உங்களது விமர்சனத்தையும் எழுதிய அடுத்த நிமிடமே படித்துவிட்டேன் :-)

    (Kung Fu Panda-2 விமர்சனம் எதிர்பார்த்தேன். ஏமாத்திட்டீங்க!)

    ReplyDelete
  5. Kung Fu Panda 2 பார்த்தேன் தல. படம் செம. அதுவும் 3Dயில் செம அட்டகாசமா இருந்துது.

    ஆனால் பதிவாய் எழுத சோம்பேறித்தனம் வந்து எழுதாமலே விட்டுவிட்டேன்.. :)

    ReplyDelete
  6. Can anyone pls give download link?????

    Thanks in advance

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...